அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் - டிடிவி தினகரன் கண்டனம்..
சிவகங்கையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மைதானத்தை மாணவர்கள் சுத்தம் செய்ததை சுட்டிக்காட்டி, பள்ளி மாணவர்களை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவை அதிகாரிகளே மீறுவது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கையில் அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் விடுதி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த மாணவர்களை உரிய பயிற்சியை மேற்கொள்ள விடாமல், அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும், விளையாட்டுக் கம்பம் தூக்கும் பணியிலும் ஈடுபடுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களை வேறு எந்த பணிகளுக்காகவும் ஈடுபடுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை, விளையாட்டுத்துறை அமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு அதிகாரிகளே மீறியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விடுதி மாணவர்களை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத அளவிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.