ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்து, குறைந்த செலவில் கேபிள் டிவி சேவை வழங்குக - டிடிவி தினகரன்..

 
ttv dhinakaran ttv dhinakaran

கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  பொதுமக்களுக்கு குறைந்த செலவில் கேபிள் டிவி சேவை வழங்குவதை மத்திய அரசும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI) உறுதி செய்ய வேண்டும் என்றும் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேனல் விலையை 19 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைக்க வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் அன்றாட நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் பயன்படுத்தக் கூடிய கேபிள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்களின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதால் பொதுமக்களுக்கான மாதாந்திர கேபிள் கட்டணமும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. 

govt cable

ஏற்கனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் கேபிள் டிவி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருப்பதோடு, தொழிலை முற்றிலும் முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக கேபிள் டிவி சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். 

எனவே, கேபிள் டிவி தொழிலை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த சேவை வழங்கும் நோக்கிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.