இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது இதனை வலியுறுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது தமிழக மீனவர்கள் மீதான அந்நாட்டு கடற்படையின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு அனுர குமார திசநாயக அவர்கள் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வர இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் இந்திய வருகையை பயன்படுத்தி நீண்ட நாட்களாக நீடித்துவரும் இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அட்டூழியத்திற்கும் முடிவுகட்டி தங்களின் மீன்பிடித் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, இதுவரை அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


