அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 
ttv dhinakaran

ஊதிய உயர்வு வழங்கக் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கக் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவப் பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்டக் குழுவினர் கூறுகின்றனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரான பின் பலமுறை மனு அளித்தும் தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் பொது சுகாதாரத்துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.