போர்க்கால அடிப்படையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 
ttv dhinakaran

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதோடு, பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் .


சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.