சொர்ணாவூர் தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 
ttv dhinakaran ttv dhinakaran

கடலூர் அருகே வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட சொர்ணாவூர் தடுப்பணையை வசாயிகளின் நலன் கருதி உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சொர்ணாவூர் தடுப்பணையின் நடுப்பகுதி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சொர்ணாவூர் தடுப்பணையில் ஏற்பட்டிருக்கும் உடைப்பால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது, புதுச்சேரி மாநிலத்தின் 28 ஏரிகளுக்குச் செல்லும் தண்ணீரும் தடைபட்டு சுமார் 4 ஆயிரம் பரப்பளவிலான பாசன நிலங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 


தடுப்பணையை பலப்படுத்த தமிழக அரசு சார்பாக 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதே, தடுப்பணையின் நடுப்பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, நிலத்தடி நீரை உயர்த்தும் வகையிலும், தமிழக மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், சொர்ணாவூர் அணையை உடனடியாக சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.