மருத்துவ படிப்பு கனவை கேள்விக்குறியாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியம் - டிடிவி தினகரன் கண்டனம்
May 13, 2025, 14:20 IST1747126228988
பேராசிரியர் பற்றாக்குறையால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை கேள்விக்குறியாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியர்கள் பற்றாக்குறை, குறைவான வருகைப்பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய கால அவகாசத்திற்குள் 24 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை வழங்க தவறியிருப்பதால் அக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பிருப்பதோடு அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் மாணவர் சேர்க்கையும் நடத்துவதில் சிக்கல் நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கண்டறியப்படும் குறைபாடுகள் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கத் தவறியதே மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தேசிய மருத்துவ ஆணையம் கோரிய விளக்கத்திற்கு உரிய பதில் உடனடியாக அளிப்பதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


