இந்தி பேசாத தமிழகத்தில் 'இந்தி மாதம்' கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல- டிடிவி தினகரன்
தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடைபெறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல – இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சொல் வளத்திலும், இலக்கணச் செழுமையிலும், செய்யுள் ஆளுமையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்ததாக திகழும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்துவதும், அதில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விருந்தினராக பங்கேற்பதும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழிக்கும் தேசிய மொழி என்ற அடையாளத்தையோ, அங்கீகாரத்தையோ வழங்காத நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் இந்திய நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், இந்தி பேசாத மாநிலமான தமிழகத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மொழி கொண்டாட்ட நிகழ்வுகளை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


