அரசியலில் திருப்பம் : திடீரென காங்., பக்கம் சாயும் திருமா..!!
Feb 18, 2026, 09:53 IST1771388627671
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
மத்திய பா.ஜ., அரசின் நெருக்கடிகளை தாக்குப்பிடித்து, பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி உள்ளது. நிதி நெருக்கடி இருந்தும், சட்ட சிக்கல் ஏற்படாதவாறு மகளிர் உரிமைத்தொகை, 5,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
ஆனால், பா.ஜ.,வினர் வயிற்றெரிச்சலில் விமர்சிக்கின்றனர். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற கோரிக்கை இயல்பானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கியதில் இருந்தே, ஆட்சி அதிகாரம் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், அதை சாத்தியப்படுத்தும் சூழல் இப்போது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதால், அந்த கோரிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை; அதேசமயம், அக்கோரிக்கையை கைவிடவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கு, காங்கிரசுக்கு உரிமை உள்ளது. இதன் வாயிலாக, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிரணியினர் நம்புகின்றனர். தமிழக காங்., தலைவர்கள் என்ன பேசினாலும், இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைமை எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள முக்கிய பொறுப்பாளர்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இரு கட்சிகளும் பேச்சு நடத்தி, சுமுக தீர்வை காண்பர். பா.ஜ., என்ன சூழ்ச்சி செய்து சதித்திட்டங்கள் தீட்டினாலும் வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

