புதுசு புதுசா யோசிச்சு விஜய் மக்களை சந்திக்க விடாமல் தடுக்குறாங்க? - திமுக மீது அருண்ராஜ் பரபரப்பு புகார்
வரும் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் விவசாயிகள், மீனவர்கள், அரசு அலுவலர் சங்கத்தினர், மகளிர் சுயஉதவி குழுக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ், “விஜய் களப்பயணம் தி.மு.க.வால் முடக்கப்படுகிறது. வேலூரில் நாங்கள் கேட்கும் தேதிக்கு, முதலமைச்சர் வேறொரு நிகச்சிக்கு ஏற்பாடு செய்து, எங்கள் நிகழ்ச்சியை முடக்கினார். புதுப்புது விதமாக யோசித்து முடக்கி வருகிறார்கள். அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தி.மு.க. விஞ்ஞான பூர்வமாக எப்படி ஊழல் செய்தார்களோ, அதுபோல் எங்கள் பிரசாரத்தை தடுக்க விஞ்ஞான பூர்வமாக திட்டம் போடுகிறார்கள். அனைத்து இடங்களுக்கும் செல்வது உரிமை. ஒரு கட்சியின் ஜனநாயக உரிமை. ஆனால் தி.மு.க. அதை தடுத்து வருகிறது. சேலத்தில் வருகிற 13-ந் தேதி விஜய் களப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கு அனுமதி கேட்டு போலீசில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கடிதத்திற்கு, தி.மு.க.வின் பதில் என்ன என்று விரைவில் தெரியும்.
கூட்டணி குறித்து விஜய் முடிவு எடுப்பார். அதை உரிய நேரத்தில் தெரிவிப்பார். பிற கட்சிகள் கூட்டணிக்கு வராவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சி அமைக்க கூடிய மக்கள் செல்வாக்கை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் பிரவின் சக்கரவர்த்தி த.வெ.க. 18 சதவீதம் ஓட்டு வாங்கும் என கூறி உள்ளார். அவர் ஒரு வருடம் தூங்கி விட்டு தற்போது வந்து பேட்டி அளித்துள்ளார். அந்த 18 சதவீதம் என்பது கடந்த ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலை. தற்போது தமிழக வெற்றிக் கழகம் 30 சதவீதத்தை தாண்டி தனித்து ஆட்சி அமைக்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது. அது அவருக்கும் தெரியும். கருத்து கணிப்பு எடுக்கிறவர்களுக்கும் தெரியும். அவர் எதற்காக குறைத்து மதிப்பிடுகிறார் என தெரியவில்லை. கூட்டணி குறித்து பா.ஜனதா அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாதவர் விஜய். தேர்தலை எந்த மாதிரி அணுக வேண்டும் என்று விஜய் தக்க நேரத்தில் முடிவு எடுப்பார். நடைபெற உள்ள தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தி.மு.க.வுக்கும் இடையே மட்டுமே போட்டி. அந்த தீய சக்தியை வீழ்த்துவே எங்களது நோக்கம்.தேர்தல் விதிமுறை வந்துவிட்டால் தி.மு.க.வின் திட்டம் பலிக்காது. அதன் பிறகு உரிய அனுமதி பெற்று நாங்கள் மக்களை நேரடியாக சந்திக்க சென்று கொண்டே இருப்போம்” என்றார்.


