வாக்கு எண்ணும் மையத்தில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்து ரசித்த தவெக நிர்வாகி கைது
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே கட்டுப்பாட்டு அறையில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்து ரசித்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணும் மையத்தில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் , மைலாப்பூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 23.4.2026 அன்று இரவு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 16.4.2026 முதல் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஒப்பந்த ஊழியர் யுவராஜ் என்பவர் சிசிடிவி கண்காணிப்பு அறையில் பணியில் இருந்தபோது தனது லேப்டாப்பில் ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பார்த்து அதனை புகைப்படம் எடுத்து, கடந்த 23.4.2026 அன்று இரவு 23.00 மணிக்கு தனது Facebook சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு முன்னதாக கடந்த 19.4.2026 அன்று காலை 09.36 மணிக்கு தனக்கு தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப அதிகாரி சைலேந்திரா அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார், தேர்தல் தொடர்பான தவறான அறிக்கைகளை வெளியிடுவது அல்லது பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து திருவாரூர் மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த யுவராஜை(31) இன்று கைது செய்தனர்.

