தென்காசி அரசு மருத்துவமனையில் புகுந்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்திய தவெகவினர்!
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மருத்துவ அணி நிர்வாகி எனக் கூறிக்கொண்டு வாசுதேவி என்பவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் விளக்கம் அளித்துள்ள வாசுதேவி, தான் நர்சிங் படித்துள்ளதாகவும், அதனால் வெள்ளை கோட் அணிந்து கொள்ள உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுடன் கலந்துரையாடவே சென்றிருந்தேன் என்கிறார் தவெகவின் மருத்துவர் அணியைச் சேர்ந்த வாசுதேவி.
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய போகவில்லை மருத்துவர்களுடன் கலந்துரையாடவே சென்றிருந்தேன்❗ என்கிறார் தவெகவின் மருத்துவர் அணியைச் சேர்ந்த வாசுதேவி
— ஐ வலையொளி🐦 மகிழன் (@I_Magizhan_21) May 20, 2026
மருத்துவர்களுடன் கலந்துரையாட சென்றீர்கள் என்றால் எதற்காக மருத்துவர்களுக்கே உண்டான வெள்ளை மேலங்கியை (WHITE COAT) அணிந்து சென்றீர்கள்… pic.twitter.com/4nOsE6uHQc
தவெக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் அறிவுறுத்தலின் பேரிலேயே தான் ஆய்வு செய்ததாக வாசுதேவி வாக்குமூலம் அளித்துள்ளார். அரசு மருத்துவமனை போன்ற பாதுகாப்பான, கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்திற்குள், அரசியல் கட்சியினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாக பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். எந்தவித முறையான அனுமதியோ அல்லது மருத்துவத் தகுதியோ இன்றி, வெள்ளை கோட் அணிந்து கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு செய்வது அதிகார வரம்பு மீறல் என்றும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

