புதுச்சேரியில் விஜய் டிச.5ம் தேதி பிரச்சாரம்

 
vijay vijay

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்,டிச.5ந் தேதி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு அனுமதி கேட்டு, டிஜிபியிடம் தவெகவினர் மனு அளித்தனர். 

Image


தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். தமிழகம், புதுவையில் தொடர்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் நடத்துவதற்காக அட்டவணையும் வெளியிட்டு பிரச்சாரம் நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ந் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். 

இதனிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை தவெக உருவாக்கியது. இவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்டனர். ஆனால் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.  இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி அரங்கத்தில் நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார்.  கியூ ஆர் கோடு மூலம் 2 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்இந்த கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தும், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டும் பேசினார். மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் வெளியே வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 5ந் தேதி புதுவையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக போலீஸ் டிஜிபி ஷாலினிசிங்கிடம், அனுமதி கேட்டு, புதுவை மாநில தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர்டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் ஒலிப்பெருக்கி மூலம் உரையாற்ற உள்ளார். எனவே இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 

டிசம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் கடலுாருக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுவை மாநிலத்தில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கு புதுவை போலீசாரின் அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.