ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் - விஜய் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் இது தொடர்பாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுறையீரலில் உள்ள சளி காரணமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு.…
— TVK Vijay (@tvkvijayhq) December 14, 2024
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


