“பெரிய படையோட வந்திருக்கேன்... 2026-ல் நான் தான் ஆட்சி அமைப்பேன்”- விஜய்
இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல... மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும் என தவெக தலைவர் விஜய் பேசினார்.
மதுரை பாரபத்தியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர்; அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல... மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும். மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது. அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும் தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்! கொள்கையை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதா.. எதிர்க்கட்சியாக இருக்கும் போது போங்க மோடி, ஆளுங்கட்சியாக வந்த பிறகு வாங்க மோடி! தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழ் நாடு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது பாஜக ஒன்றிய அரசு
நான் ஒன்றும் மார்க்கெட் போனபிறகு ரிட்டையர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. 2026-ல் நான் தான் ஆட்சி அமைப்பேன். 234 தொகுதியிலும் நான் தான் போட்டியிடப்போறேன். உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் தான் வேட்பாளரா நிற்கப்போகிறார். அந்த வேட்பாளரும், நானும் வேறு வேறு இல்லை. அவருக்கு ஓட்டு போட்டா, எனக்கு ஓட்டு போட்ட மாதிரி. தூத்துக்குடி ஸ்னோலினின் அம்மா என்னை தன் தம்பி என்றார். நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம். என் கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது” என்றார்.


