கார்த்திகை தீபத் திருவிழா- தி.மலையில் பக்தர்கள் ஏற இந்த ஆண்டும் அனுமதி இல்லை
கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபமலையில் பக்தர்கள் ஏற, இந்த ஆண்டும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கிக் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதக்கூடிய பரணி தீபம் மற்றும் மகா தீபம் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் 2668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மகா தீபகொப்பரை தற்பொழுது தயார் நிலையில் உள்ளது. சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக மஹா தீப கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுக்கும் அண்ணாமலையார் திருவுருவம் வரையப்பட்டு தற்பொழுது ஆயிரம் கால் மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளது.
வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திருக்கோவிலில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊழியர்களால் 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது கொண்டு செல்லப்பட்டு பிறகு 1000 மீட்டர் காடா துணியும், 3500 கிலோ நெய்யும் மகா தீப கொப்பரையில் நிரப்பப்பட்டு டிசம்பர் 3ஆம் தேதி மாலை தீப மலையின் மீது அண்ணாமலையார் ஜோதி சுரூபமாக காட்சியளிக்க உள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், பாதுகாப்பு கருதி தீபமலையில் பக்தர்கள் ஏற, இந்த ஆண்டும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட நிலச்சரிவு, தற்போதைய கனமழை எச்சரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


