போராட்ட களத்தில் தவெக தலைவர் விஜய் : அஜித்குமார் மரணத்தில் “சாரி வேண்டாம்... நீதி வேண்டும்..” என முழக்கம்..
மடப்புரம் கோயில் ஊழியர் அஜித் குமார் கொலையை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. முதலில் சி.பி.சி.ஐ.டி வசம் இருந்த இந்த வழக்கு பின்னர் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்பாரா என கேள்வி எழுபிய நிலையில், விஜய் தலைமையில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், “சாரி வேண்டாம்... நீதி வேண்டும்.” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழகத்தில் லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசியல் களமிறங்கிய பின்னர் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் மற்றும் அவர் பங்கேற்கும் முதல் போராட்டம் இதுவே ஆகும். முன்னதாக கோவில் பாதுகாவலர் அஜித்குமார் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவி வழங்கியிருந்தார். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், நேற்று (12-07-25) கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..


