தமிழகத்தில் மேலும் 2 மினி டைடல் பூங்காக்கள்.. முதல்கட்ட பணிகள் தொடக்கம்..

 
TNGOVT

தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்காவை அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை 17.2.2024 அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.   அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை  23.09.2024 அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.   இந்நிலையில்,  மேலும் இடங்களில் மினி டைடல் பூங்காவை அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.  இதன்படி, கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை  தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. 

மினி டைடல் பூங்கா கட்டடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.