செம்பரம்பாக்கம், திருநின்றவூரில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி..!

 
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம்  திருநின்றவூரில் மழையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி முகதுவாரத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.  அந்தவகையில் ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17 வது வார்டுகளில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் மற்றும் சுதேசி நகரில் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.   2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்தப்பகுதியில் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி குடியிருப்புகளில் 5 அடி அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

Image

இதையடுத்து ஆவடி  நகராட்சி நிர்வாகம் சார்பில்  ராட்சத மோட்டார்கள் வைத்து,  அன்னை இந்திரா நகர் பகுதி வழியாக நெமிலிச்சேரி அருகே உள்ள கூவத்தில் தண்ணீரை வெளியேற்ற ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து   மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஈசா ஏரியின் முகத்துவார பகுதியையும் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

Image

பின்னர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் வெளியேறும் கண் மதகுகளின் உறுதித்தன்மை, தற்போதைய நிலை, நீர்வரத்து, நீர் இருப்பு , நீர் வெளியேற்றும் வழியின் நிலை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், மழைக்காலம் என்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் ஏரியை தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.