வேளச்சேரியில் ஏசி ஜிம்-ஐ திறந்து வைத்த உதயநிதி..
வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விளையாட்டுத்துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் 1,512 பேருக்கு ரூ.24.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து நேற்றைய தினம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய உதயநிதி, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்,.
இந்த நிலையில் இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் வேளச்சேரியில் உள்ள SDAT AGB Complex-இல் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். மேலும், Gym-இல் இடம்பெற்றுள்ள வசதிகளை பார்வையிட்டு, அங்கு பயிற்சி பெறும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும், அங்குள்ள தங்குமிடம், நீச்சல் குளம் போன்றவற்றையும் ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


