‘உதயநிதிக்கு ஏற்றம்; ஆனா துரைமுருகனுக்கு தான் ஏமாற்றம்’ - தமிழிசை சௌந்தரராஜன்..

 
Tamilisai


‘அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும்’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.  

தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை,  துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேநேரம் அண்மைக்காலமாக அமைச்சரவையில் மாற்றம் வரப்போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதுகுறித்து முன்னதாகவே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், “காய்த்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை” என்று  கூறியிருந்தார். அதன்பின்னரும்  துணை முதலமைச்சர் குறித்து அடிக்கடி பேச்சுகள் எழுந்தன. அந்தவகையில் இன்று காலை செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்” என்று கூறியிருந்தார்.  

இந்த நிலையில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சரின் கருத்தை விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். யார் ஏற்றம் பெறப் போகிறார்கள், யார் ஏமாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கண்டிப்பாக எல்லோருக்கும் ஏற்றமாக இருக்காது. பலருக்கும் ஏமாற்றத்தைத் தரப் போகிறது.  

udhayanidhi stalin

உதயநிதிக்கு முடிசூட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் முறையில் இவர்கள் போன்றவர்கள் பதவிக்கு வந்தால் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கு நல்லதல்ல, ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. 

திமுக ஆட்சியில் என்கவுன்டர்கள் அதிகம் நடக்கிறது. திமுக பொறுப்பேற்ற பின்னர் 17 என்கவுன்டர்கள்  நடந்துள்ளன. யாரையோ காப்பாற்றுவதற்கு இதெல்லாம் நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கஞ்சா பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சரியாக இல்லை. 

சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்கள். துணை முதல்வர் பதவியை திருமாவளவன் போன்றோருக்கு வழங்கக்கூடாது என மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே நான் கேட்டிருக்கிறேன்” என்றார்.