சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம்- உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறும். அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். ஆரம்பத்தில் ஊர் தெருவிலும் பிறகு மந்தையிலும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக ஊர் குளக்கரையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் தேவை என அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது அதனை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அங்கு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இருபுறமும் 800 முதல் 900 பேர் அமரக்கூடிய வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக திறக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காளை ஒன்றை பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொங்கல் தினத்தில் பொங்கலை கொண்டாட நமது பகுதிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கு உதவி புரிந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அடுத்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பொங்கல் பண்டிகையை உங்களுடன் கொண்டாட இங்கு வந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்துள்ளோம். திருச்சிக்கு மலைக்கோட்டையும், காவேரி ஆறும் அடையாளங்களாக இருப்பது போல் சூரியூர் ஜல்லிக்கட்டும் அடையாளம். தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் முதலமைச்சர் மினி ஸ்டேடியங்கள் திறக்கப்பட்டு வருகிறது. நான் திறந்ததிலேயே இந்த சூரியூரில் திறக்கப்பட்டுள்ள மினி ஸ்டேடியம் தான் அழகாகவும் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு வளர்ச்சிகளை தமிழ்நாடு கண்டு வருகிறது. சூரியூரும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. சூரியூரில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி கட்டப்பட்டு வருகிறது கடந்த ஆட்சி காலத்தில் முடிவடையாமல் இருந்த ரிங் ரோடு பணிகளை திமுக ஆட்சி அமைந்த பின்பு முடித்துள்ளோம். மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தப்படியாக ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் சூரியூரில் தான் கட்டப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தருவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் காத்திருக்கிறார் அடுத்த வருடம் உங்களோடு சேர்ந்து இங்கு ஜல்லிக்கட்டில் போட்டியை காண்பதற்கு ஆர்வத்துடன் இருக்கிறேன். அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசளித்த காளைக்கு சூரியூர் என பெயர் வைக்கிறேன்” என்றார்.
நாளை சூரியூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட உள்ளது அந்த கார் சாவியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


