நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா - முன்னேற்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் ஆய்வு

 
udhayanidhi

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகிற 02.12.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15.12.2024 வரை நடைபெறுவதையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று (24.11.2024) விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்களுடன் அதிகாரிகளுடன், மக்கள் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் ஆய்வு செய்திருக்கின்றோம். நாகூர் சந்தனக்கூடு விழா சிறக்க அனைத்து ஏற்பாடுகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்துள்ளது.

முக்கியமாக, சந்தனக்கூட்டிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசே கட்டணமின்றி தர்கா நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளது. அதற்கு தர்கா நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளார்கள். சந்தனக்கூடு திருவிழாவுக்கு, தமிழ்நாடு மட்டுமன்றி, வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வர உள்ளனர். அவர்களுக்கான தங்குமிடம், உணவு, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் குடிநீர்த்தொட்டி (தண்ணீர் டாங்க்) அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. நாகூர் சந்தனக்கூடு திருவிழாவின்போது தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க உத்தரவிட்டிருக்கின்றோம்.
மேலும், சிசிடிவி கேமரா வசதி, கண்காணிப்பு கோபுரங்களை ஏற்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றோம். அன்னதான முகாமில் வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடற்கரையில் போதிய பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறப்பு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என கூறினார்.