அங்கன்வாடியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு- "Rhymes" பாடி அசத்திய குழந்தைகள்...

 
ச் ச்

தேனி மாவட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 9 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Image
  
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதில் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Image

 அதனைத் தொடர்ந்து வருவாய், வேளாண்மை, கூட்டுறவு என அரசின் பல்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் உள்பட சுமார் 800க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் முதலமைச்சரின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 9 புதிய வழித்தடங்களுக்கான மினி பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் வீரபாண்டியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இன்று ஆய்வு செய்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன் அங்கன்வாடி குழந்தைகள்  "Rhymes" பாடி அசத்தினர். அதனை அவர், மகழ்ச்சியுடன் கண்டு களித்தார். அங்குள்ள ஆசிரியர்களிடம், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவான நாளைய தலைமுறையை உருவாக்கிடும் பொறுப்பு, அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.