சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே- உதயநிதி ஸ்டாலின்
சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே, ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். சனாதனம் குறித்து நான் பேசியது நிறைய பேருக்கு வயிற்றேரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. எதுவுமே மாறக் கூடாது, எல்லாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று விளக்கம் சொல்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது என்பதுதான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்.
மாற்ற முடியாதது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்கு பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், கம்யுனிச இயக்கமும். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதை மாற்றியதுதான் திராவிடமாடல். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். நாம் நம்ம குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக, யோசிச்சு திட்டங்களைக் கொண்டு வருகின்றோம். ஆனால், பாசிஸ்ட்டுகள் நம்ம குழந்தைகளைப் படிக்க விடாமல் செய்வதற்கு என்ன வழின்னு யோசிச்சு அதற்கான திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்” என்றார்.