எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார்- உதயநிதி ஸ்டாலின்
அரசின் திட்டங்கள் குறித்து தன்னை அழைத்தால் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்கப்படுவதாக விமர்சனம் எழுதுகிறது. பொதுவாக விமர்சனம் என்றால் வரத்தான் செய்யும். வேறு யார் பெயரை வைப்பது... யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்த கேள்விக்கு தன்னை அழைத்தால் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, சென்னை அருகே விளையாட்டு நகரம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் சில பிரச்சனையின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என்றும் தற்போது அது சரி செய்யப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.