சென்னையில் மழை பாதிப்பு குறித்த புகார்கள்...உடனடி நடவடிக்கை - துணை முதலமைச்சர் பேட்டி
மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. 129 நிவாரண மையங்கள், 20 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. காலை 9.30 மணி நிலவரப்படி எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை. மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.