"திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது"- உதயநிதி ஸ்டாலின்

 
"திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது"- உதயநிதி ஸ்டாலின் "திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது"- உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் "உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்ற நிலையில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் முதல் 3 இடம் பிடித்த போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக 3 லட்சமும், இரண்டாம் பரிசாக 2 லட்சமும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சமும் வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட இளைஞரணி வரலாற்றில் முக்கியமான, மறக்க முடியாத நாள். கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு நம் கழகத்தில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் முதல்வர் ஒவ்வொரு பணிகளை வழங்கி இருந்தார். இளைஞர் அணிக்கு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்கள் அமைக்க வேண்டும் என்றும்... அதேபோல் "உயிரினும் மேலான" என்ற பேச்சுப் போட்டியும் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் இதுவரை 75 தொகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை திறந்து விடுவோம். 

அதைப்போல் இந்த இயக்கத்திற்கு பயனுள்ள வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்த வேண்டும் என முதல்வர் கூறியிருந்தார். முதல்வர் என்னை எதிர்பார்த்தாரோ அதை நாங்கள் செய்திருக்கிறோம் என இளைஞர் அணி சார்பில் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இங்குள்ள பேச்சாளர்களின் பேச்சே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க 17 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். 47 இடங்களில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளை நடத்தினோம். 10 தலைப்புகள் வழங்கப்பட்டு.. இளைஞர் அணி சார்பில் 85 நடுவர்களை நியமித்தோம். சென்னையில் நடந்த போட்டிகளை நானே நேரில் சென்று பார்த்தேன். மெய்மறந்து ரசித்தேன். சிறப்பாக பேசினீர்கள். பேசுவதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நம் திராவிட இயக்கத்தை யாராலும் விழத்த முடியாது என்ற நம்பிக்கை வந்தது. சரியான வேலையை செய்து சரியான பேச்சாளர்களை முதல்வரிடம் ஒப்படைத்த மனநிறைவு எனக்கு தற்பொழுது இருக்கிறது.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற 17,000 போட்டியாளர்களில் இருந்து 913 பேரை தேர்வு செய்து மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்தோம். 913 பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கி ஊக்கு வைக்கப்பட்டனர். 913 பேரையும் நல்ல அளவில் பட்டை திட்ட வேண்டும் என அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கொடுத்து நடுவர்கள் அவர்களை ஊக்குவித்தார்கள். 913 பேரில் இருந்து 182 சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு நடுவர்கள் நம்மிடம் ஒப்படைத்தார்கள். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாக 182 பேரும் இரண்டு பிரிவாக பிரித்து போட்டிகள் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைவரும் வெற்றியாளர்கள் தான். ஆனால், 3 பேருக்கு தான் பரிசு கொடுக்க முடியும். முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு இளைஞர் அணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த போட்டிகளின் சிறப்பு என்னவென்றால்.. ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் பங்கேற்று இருந்தார்கள். அந்தப் பெண்களுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெளியூரில் போட்டிகள் நடக்கிறது என்றால் சிலர் பெண் குழந்தைகளை அனுப்ப தயங்குவார்கள். ஆனால் இங்கு இவ்வளவு பெண்கள் பங்கேற்று இருக்கிறீர்கள். இதற்கு உங்கள் பெற்றோர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கிய காரணம். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பேச்சுப் போட்டியை நடத்த தலைவர் அனுமதிக்க வேண்டும். இங்க இருக்கக்கூடிய போட்டியாளர்கள் அனைவரும் தலைசிறந்த பேச்சாளர்களாக இடி, மின்னல், மழையை போல் உருவாக வேண்டும். தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை பேச்சாளர்களை தலைவரிடம் ஒப்படைப்பதில் இளைஞர் அணி மகிழ்ச்சி அடைகிறது. இனி எப்போதும் எங்களுடன் தான் இணைந்து பயணம் செய்ய போகிறீர்கள். உங்களுக்கு எப்போதும், எல்லா வகைகளிலும் இளைஞர் அணி துணையாக இருக்கும். 182 பேரை மாவட்ட கழக செயலாளர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.