"என் தலைக்கு விலை பேசினார்கள்"- உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நாட்டு நலப்பணித் திட்ட மாணாக்கர்களுக்கு நடைபெற்ற 3 நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

அதன் நிறைவுநாளான இன்று அதில் கலந்துகொண்டு உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு தந்தை பெரியார் அவர்களால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே பாசிச கும்பல் பரப்பும் அவதூறுகள் எதுவும் எடுபடாது. இந்தியாவில் இருக்கக்கூடிய பாசிச கும்பல், பொய் செய்திகளை பரப்புவதையே Full Time Job-ஆக செய்து கொண்டிருக்கிறார்கள். 3 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று 'பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி இருந்தால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும்' என்று பேசினேன். என் பேச்சை திரித்து இனப்படுகொலையை தூண்டி விட்டதாக பொய் செய்தியை பரப்பினார்கள்.
சொல்லாததை சொன்னதாக நாடு முழுவதும் வதந்தி பரப்பினார்கள். என் தலைக்கு விலை பேசினார்கள். ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவந்தால் ரூ.10 லட்சம் தருவேன் என்றும் மற்றொரு சாமியார் ரூ.1 கோடி தருவேன் என்றும் கூறினார்கள். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் பேசியதில் எந்தத் தவறும் கிடையாது. மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றத்திற்கும் செல்லுங்கள். வழக்கை எதிர்கொள்வேன் என்றேன்” என்றார்.


