தமிழ், தமிழர்களை அழிக்கத் துடிக்கின்றனர் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 இருக்கைகள் கொண்ட கலைஞர் கலையரங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், வணிகவியல் துறை பேராசிரியருமான ஆர்.ராஜ்குமார் கல்லூரியின் வளர்ச்சி நிதிக்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சரிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கோ.வி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, காரப்பாக்கம் கணபதி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். நான் படித்த லயோலா கல்லூரியை விட அதிகமாக வந்தது நந்தனம் கல்லூரிக்கு தான். நண்பர்களுடன் விளையாட மைதானத்திற்கு வந்திருக்கிறேன். இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். கல்லூரிக்கு வகுப்பறை, ஆய்வரங்குகள் விட முக்கியமானது கலையரங்கமும் மிக முக்கியம். மாணவர்களுக்கு இந்த கலையரங்கம் பல நினைவுகளை தரும் என நம்புகிறேன்.
இந்தி திணிப்பு எதிராக மாணவர்கள் போராட்டம் தொடங்கிய முதல் கல்லூரி நந்தனம் கல்லூரி தான். நந்தனம் அரசு கல்லூரியில் இந்தி திணிப்புக்கு எதிராக கலைஞர் பேசிய கருத்துக்கள் இன்றளவும் பொருந்தும். இன்றைய காலத்தில் இந்தி திணிப்பு எதிராக நமது முதலமைச்சர் ஆட்சியில் மாணவர்கள் நிச்சயம் வென்றெடுப்பீர்கள். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என மும்மொழி கொள்கை போன்றவைகளை கொண்டு வருகிறார்கள். இதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்கள் எழுச்சி தான் இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது. கல்விக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, கல்வி நிதியை தராமல் இருப்பது என பல தொந்தரவுகளை ஒன்றிய அரசு கொடுக்கிறது. இதனை மாணவர்கள் புரிந்து கொண்டால் எதிரியை வெல்லலாம். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அது என்றும் தொடரும் என்ன நம்புகிறேன். தமிழையும், தமிழர்களையும் அழிக்கத்துடித்து கொண்டிருக்கின்றனர். இன எதிரிகள் நம்மை வெற்றி கொள்ள முடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீட், இந்தி திணிப்பு, கல்விக் கொள்கை என தமிழை, தமிழர்களை அழிக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.


