டிச.16 முதல் டோக்கன்; ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை- உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரண நிதியான 6000 ரூபாய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்தாக இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட அய்யாசாமி குடிசைப் பகுதி, வரதராஜபுரம், நரியங்காடு, லாங்க்ஸ் கார்டன் ரோடு மற்றும் ஆங்கிலோ-இந்தியன் குவார்ட்டர்ஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஏற்பாட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று, பெட்ஷீட், புடவை, கைலி, ரொட்டி மற்றும் தலா 5 கிலோ கொண்ட அரிசிப் பை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை 1500 பேருக்கு வழங்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணியாற்ற, திமுகவினர் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். டோக்கன் வழங்கப்பட்டு ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரண நிதியான 6000 ரூபாய், உள்ளத்தால் காயமடைந்த மக்களுக்கு மருந்தாக அமையும்” என்றார்.