"பருவமழையை எதிர்கொள்ள தயார்"- உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார். TN ALERT ஆப் மூலம் மழை பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். 13 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முடிவடையாத மழைநீர் வடிகால்களை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது.3,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நம்ம சென்னை செயலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.


