"கல்வி மட்டும்தான் வாழ்க்கையை மாற்றும்"- உதயநிதி ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேரை உயர்கல்வி படிக்க வைக்க உள்ளோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு -2025 திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், SSC மற்றும்RRB வங்கி தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி துணை முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திடத்தின் கீழ் கல்லூரி கனவு 2025 துவக்கி வைப்பதிலும் SSC, RRB தேர்வானவர்களை பாராட்டுவதிலும் மகிழ்ச்சி. 2K கிட்ஸ் உங்களுக்கு அட்வைஸ் சொன்னால் பிடிக்காது. தந்தை பெரியார் சொன்னதை போல் “யார் என்ன சொன்னாலும் கேள்... உனக்கு சரி என்றால் மட்டும் எடுத்து கொள்” என்பார் அதை போல் செயல்படும் Gen Z தலைமுறை நீங்கள். அடிப்படையிலேயே அதிக சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 1 இலட்சம் மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கபோகிறோம். கல்வி மட்டும்தான் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும். இந்தியாவில் அதிகம்பேர் உயர்கல்வி படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது. நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணவர் விகிதம் 29 சதவீதம் தான். தமிழ்நாட்டில் அது 52 சதவீதமாக உள்ளது.

உங்கள் பலரின் தாத்தா, பாட்டி பள்ளி படிப்பினையே படித்திருக்கமாட்டார்கள், இன்று உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அதற்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் இடஒதுக்கீடு தான் இன்று நீங்கள் உயர்கல்வி பயில காரணம், முத்தமிழறிஞர் மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள் , தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை கொடுத்துள்ளார்கள். உயர்கல்வியில் தமிழ்நாட்டினை வட மாநிலங்கள் 10-15 ஆண்டுகள் ஆனாலும் பிடிக்கமுடியாது. நீங்கள் இன்று இங்கு உள்ளீர்கள் என்றால் அதற்கு இன்னால் ஒரு இயக்கத்தின் உழைப்பு உள்ளது. கலை, அறிவியல் , பொறியியல் , இவற்றையெல்லாம் கடந்து தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்ப ஏ.ஐ உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன. கல்லூரியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து வல்லுநர்கள் விளக்கமளிப்பார்கள் கேட்டு பயன்பெறுங்கள். நான் முதல்வன் திட்டதின் கீழ் தங்கி படிக்கும் வசதி உள்ளது இவ்வாண்டு 50பேர் தேர்வாகியுள்ளனர். 58 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் SSC,RRB தேர்வுகளில் வென்றுள்ளனர். கல்லூரி கனவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் உங்களுக்கும் , SSC, RRB தேர்வுல் தேர்வானவர்களுக்கும் வாழ்த்துகள்” என்றார்.


