“தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது பெண்களுக்கான ஆட்சி”- உதயநிதி ஸ்டாலின்
பெண்களுக்கு சம சொத்துரிமை கொடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக சட்டம் கொண்டுவந்தவர் கலைஞர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “பெண்களுக்கு சம சொத்துரிமை கொடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக சட்டம் கொண்டுவந்தவர் கலைஞர். 1989ல் பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு என சட்டம் இயற்றியவர் கலைஞர். 2021ல் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து விடியல் பயண திட்டம். முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது பெண்களுக்கான ஆட்சி. அனைத்து திட்டங்களும் பெண்களை மனதில் வைத்தே தீட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் 43% பெண்கள் பணியாற்றுகின்றனர். விளையாட்டிலும் தமிழ்நாட்டு பெண்கள் சாதித்து வருகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது. பெண்களுக்கு உரிமை உறுதி செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது” என்றார்.


