“திமுகவை நம்பினேன்... சமூக நீதி பேசும் இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்கும் என நினைத்தேன்... ஆனால்”- கதறும் கெளசல்யா

 
“திமுகவை நம்பினேன்... சமூக நீதி பேசும் இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்கும் என நினைத்தேன்... ஆனால்”- கதறும் கெளசல்யா “திமுகவை நம்பினேன்... சமூக நீதி பேசும் இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்கும் என நினைத்தேன்... ஆனால்”- கதறும் கெளசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெளசல்யா, “திமுக ஆட்சியமைந்த போது நிஜமாகவே எனக்கு நீதி கிடைக்கும் என நம்பினேன். சமூக நீதி பேசும் இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்கும் என நினைத்தேன். ஆனால், நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தாமதிக்கிறார்கள். வழக்கை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்முறையீட்டில் கொலை செய்த தரப்புக்கு எதிராக எந்த வாதத்தையும் முன் வைக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் 15,000 பக்கங்கள் கொண்ட வழக்கின் கோப்புகளில் 500 பக்கங்களை காணவில்லை எனக் கூறினர். அதை வைத்தே 3 ஆண்டுகளை ஓட்டிவிட்டனர். இப்போது மொழிப்பெயர்க்க வேண்டுமென 6 மாதங்களை கேட்கிறார்கள். இவ்வளவு அலட்சியத்தை பார்க்கையில், இந்த வழக்கில் நீதி கிடைக்கக் கூடாதென அரசு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதைப் போல தோன்றுகிறது. சமூக நீதி பேசும் இந்த அரசே ஆணவக்கொலைக்கு எதிராக வலுவாக நிற்கவில்லை எனில் வேறெந்த கட்சி, வேறெந்த அரசு சாதியவாதிகளுக்கு எதிராக நிற்கும்?.

சிசிடிவியில் பதிவான நபர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துதான் 2020 செப்டம்பர் 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய அரசு துணையாக இல்லை. பல முறை விரைவு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தோம். அதையும் அரசு மெத்தனப்போக்காகத்தான் அணுகியது. கடைசியாக நவம்பரில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவணங்களை மொழிப்பெயர்க்க ஆறு மாத அவகாசம் தேவை என்றனர். சாதிய வாக்குகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்களின் வழக்கை மெத்தனமாக இழுத்தடிக்க முயல்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.