உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசுகள், இனிப்புகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் கறி விருந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை முன்னிட்டு பலரும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆட்டுச் சந்தைகளில் விற்பனை களைகட்டி வருகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில், வியாபாரிகள் மற்றும் மக்கள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


