அனைத்து மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு! மாநில உரிமைகள் மீது மேலும் ஒரு இடி!

 
K balakrishnan

மாநில அரசின் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மூலமே தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடத்திட அனுமதித்திட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து கல்வித்துறையில் அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. மொத்தக் கல்வியும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போகும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதனுடைய அடுத்தக்கட்டமாக தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாக கலந்தாய்வு செய்வது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் என்ற பெயரிலும், மருத்துவப் படிப்பில் முறைகேடுகளை களைவது என்ற பெயரிலும் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்புக்கு நேரிடையாக ஒன்றிய அரசு கலந்தாய்வு செய்வது மாநில உரிமை பறிப்பு என்பதுடன் தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவப் படிப்பில் மண்ணைப் போடுவதாக அமைந்துள்ளது.

doctors

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதமான இடஒதுக்கீடும், அவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசே நேரடியாக கலந்தாய்வு நடத்துவதின் மூலம் இந்த உரிமை தட்டிப்பறிக்கப்பட்டு விடும். இதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் சேரும் 7.5 சதமான மாணவர்களுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும் நிலைமை உள்ளது. இந்த உரிமையும் பறிபோகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இளநிலை மருத்துவப் படிப்பில் 15 சதமான இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதமான இடங்களுக்கும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 100 சதமான இடங்களுக்கும் ஒன்றிய அரசின் மூலமே கலந்தாய்வு செய்யப்படுகிறது. இதுபோக மீதமுள்ள அனைத்து இடங்களுக்கும் மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் கலந்தாய்வு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய ஒன்றிய அரசின் முடிவின்படி 100 சதமான இடங்களையும் ஒன்றிய அரசின் கலந்தாய்வுக்கு எடுத்துக் கொள்வதின் மூலம் மாநில அரசின் உரிமை முழுக்கப் பறிக்கப்படுகிறது.

இடஒதுக்கீடு கேள்விக்குறி

Central Govt

பல மாநிலங்களில் பலவகையான இடஒதுக்கீடு கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலின பழங்குடியினருக்கு 69 சதமான இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஒரே கலந்தாய்வு செய்வதன் மூலம் இந்த இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுமா என்பதும் இதனால் பெரும் பாதிப்பும் ஏற்படும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனியாக 69 சதமான இடஒதுக்கீடு கொள்கை அமலாக்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பெற வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கையால் இத்தகைய இடஒதுக்கீட்டு முறை பறிக்கப்பட்டு ஒரு சில உயர் மருத்துவக் கல்லூரிகளில் உயர்சாதியினரும், இரண்டாம் தர, மூன்றாம் தர மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., மாணவர்கள் பயிலும் மோசமான நிலை ஏற்படும்.

கட்டணக் கொள்ளைக்கு பச்சைக் கொடி

 counselling 2023

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதமான கலந்தாய்வை தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விடும். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 100 சதமான இடங்களுக்கும் அரசு தீர்மானிக்கும் கல்விக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. ஆனால், தற்போதைய ஒன்றிய அரசின் நடவடிக்கையால் 50 சதமான இடங்களுக்கு மட்டும் அரசு தீர்மானிக்கும் கல்விக் கட்டணமும், மீதமுள்ள இடங்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களே கட்டணத்தை தீர்மானிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்படும் போது தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு பெரும் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 70க்கும் மேல் உள்ளன. இவைகளில் ஒட்டுமொத்தமாக 12025 இடங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை வளர்க்க தமிழ்நாடு அரசு அதிகமான மூலதனமிட்டு அதிக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் பொது கலந்தாய்வு நடத்தும் போது பிற மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் வந்து படிப்பதற்கும், தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடுமையினை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தி ஏழை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை ஒன்றிய அரசு நிர்மூலமாக்கி விட்டது. தற்போது, பொது கலந்தாய்வின் மூலம் தமிழ்நாடு மாணவர்களுக்கு மிகப்பெரும் தீங்கினை இழைத்துள்ளது.

உரிமைக் குரலெழுப்புவோம்

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் பொது கலந்தாய்வினை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சூழ்நிலையில், தற்போது மீண்டும் பொது கலந்தாய்வை உறுதி செய்து தேசிய மருத்துவக் கல்வி ஆணையம் உத்தரவிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்ற வரிசையில் தற்போது மருத்துவக் கல்வியும் சேர்க்கப்பட்டுள்ளது ஒன்றிய அரசின் ஒற்றைக் கலாச்சாரத்தை வலிந்து திணிப்பது என்பதைத் தவிர வேறல்ல. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஜனநாயக அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

தற்போது பொதுப் பட்டியலில் கல்வி உள்ள நிலையில், மாநில அரசுகளுடன் எவ்வித ஆலோசனையும் பெறாமல் தன்னிச்சையாக மருத்துவ கல்வி முழுமைக்கும் பொது கலந்தாய்வு என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமின்றி, மாநில அரசுகளின் உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் நடவடிக்கையாகும்.

எனவே, ஒன்றிய பாஜக அரசு இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல மாநில அரசின் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மூலமே தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடத்திட அனுமதித்திட வேண்டுமென வற்புறுத்துவதோடு, இதனை ஒன்றிய அரசு தொடர்ந்து அமலாக்கும்பட்சத்தில் தமிழ்நாடு மக்கள், மாணவர்கள், பொதுமக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிய அரசை எதிர்த்து போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது. " என்று குறிப்பிட்டுள்ளார்.