இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை பொறுத்தவரை, அவ்விரு கட்சிகள்மட்டுமே கூட்டணியில் இருக்கும் நிலையில், மேலும் பல கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனை கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. இதற்காக, அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு, பா.ஜ.க. தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். மேலும், இது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸும் டெல்லியில் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி தலைமை தாங்குவதால், கூட்டணி குறித்து பழனிசாமிதான் முடிவெடுப்பார் என 10-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி வீட்டுக்குச் சென்ற பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார். நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அவர், கூட்டணி விரிவாக்கம், தேர்தல் தொடர்பான பணிகள், தொகுதி பங்கீடு, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவருடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று அமித்ஷா தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வருகிறார். வேலூரில் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளுடன், கட்சி அமைப்பு ரீதியான ஆலோசனையில் அமித்ஷா ஈடுபடுகிறார். தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமியையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாளை (டிச.16-ம் தேதி) ராணிப்பேட்டையில் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நடைபெற உள்ள நிலையில், இன்று அமித்ஷா வேலூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


