ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன் - அமித் ஷா தமிழில் டுவீட்

 
Amit Shah

ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார்.  இந்த நடைபயணத்தை அண்ணாமலை  ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று தொடங்கினார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று  காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 


இந்நிலையில், இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.