நாய்க்கடிக்கு தடுப்பூசி போடாத சிறுவன் பலி! ராமநாதபுரத்தில் சோகம்
இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ரேபிஸ் நோய்க்கு சிறுவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் நகராட்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர், நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சிறுவரை கடித்துள்ளது. ஆனால் அவர் நாய் கடிக்கான ஊசிகள் போடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமாகி, அவரது நடவடிக்கையும் மாறியுள்ளது. அதனையடுத்து அவரது பெற்றோர் ராமநாதபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம், உடனடியாக மது அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
அதனையடுத்து செப். 23-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, ரேபிஸ் இருப்பதை உறுதி செய்து, தனி வார்டில் அனுமதிக்கச் சொல்லியுள்ளனர். ஆனால் சிறுவனை அங்கு அனுமதிக்காமல், மருத்துவர்களுக்கு தெரியாமல் பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து பட்டுக்கோட்டைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு உடல்நிலை மோசமடைந்ததும், ராமநாதபுரத்துக்கு அழைத்து வந்துள்ளனர். வரும் வழியில் அச்சிறுவர் கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை சுகாதாரத்துறைக்கு தெரியாமல் குடும்பத்தினர் தகனம் செய்துவிட்டனர். ராமநாதபுரம் சுகாதாரத்துறையினர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர், அருகில் உள்ளவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். மேலும் அப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் எடுத்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி நகர்நல அலுவலரடம் கேட்ட போது, மதுரை அரசு மருத்துவனை தகவலின்படி உயிரிழந்த சிறுவனுக்கு ரேபிஸ் இருக்கலாம் என கூறப்பட்டதால், அவரது பெற்றோர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் மூன்று தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். நாய், பூனை, குரங்கு போன்ற விலங்கினங்கள், கடித்தாலோ, நகத்தால் வறண்டினாலோ, நாக்கால் நக்கினாலோ உடனடியாக அதற்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். அச்சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் தகனம் செய்தது குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை செய்து வருகிறோம். உடற்கூறு ஆய்வு செய்திருந்தால் எந்த வகையான ரேபிஸ் நோய் என்பது தெரிய வந்திருக்கும். அதற்கு ஏற்றாற்போல் சுகாதார நடவடிக்கைகள் எடுக்க முடியும் என தெரிவித்தார். எனவே ராமநாதபுரம் நகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஊராட்சி நிர்வாகங்கள் குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


