மே 8ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

 
vaccine


நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக வருகிற மே 8ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 

கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ள கொரோனா வைரஸ் தற்போது XE வடிவில் நம்மை மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் அலையில் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டதின் காரணமாக மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு தமிழகத்தில் வாரத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாமும் முக்கிய காரணமாகும். இதனிடையே கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. 

masu

இந்நிலையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , "உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது; இந்தியா மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மே 8ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை தனித்தனியே சந்தித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  வரும் 8ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றார்.