வடிவேல் ராவணன் நீக்கம்.. புதிய பொதுச்செயலாளரை நியமித்த ராமதாஸ்..!!
பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி, முரளி சங்கர் என்பவரை நியமித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி, மாறி நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளன. ராமதாஸ், தமிழகம் முழுவதும் ஒங்காக செயல்படாத மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதன்படி இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

அந்தவகையில் 60 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 39 மாவட்ட தலைவர்களை அவர் மாற்றியுள்ளார். முன்னதாக பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கம் செய்து, அவருக்கு பதிலாக வி.எஸ்.கோபு வழக்கறிஞரை சமூகநீதி பேரவையின் தலைவராக நியமனம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு கட்சி மாவட்டமாக நிர்வாகிகளை மாற்றி வந்த அவர், பாமக பொதுச்செயலாளர் பதவியில் இருந்த வடிவேல் ராவணனை நீக்கியுள்ளார். புதிதாக முரளி சங்கர் என்பவரை பாமகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட பாமக வடக்கு மாவட்ட செயலளார்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


