இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்- வைகோ

 
vaiko

இன்று 05.012.2023 நடைபெற்ற நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் கோரிக்கை எழுப்பினார். 

vaiko ttn

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். சுமார் 800 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் படகுகள், சேதப்படுத்தப்பட்டு, மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, படகுகளைக் கைப்பற்றி, சேதப்படுத்திய செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றி ஏலத்தில் விடுகின்றது. அண்மைக் காலமாக இது தொடர் கதையாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு, இலங்கைக் கடற்படையினரால் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டமீனவர்களையும் அவர்களது படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

fishermen

இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இலங்கை அரசிடம், இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அடிக்கடி தமிழக மீனவர்களை படகுகளைக் கைப்பற்றியும், கைது செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் இடைவிடாத துன்புறுத்தலுக்கு ஆளாகும் நம் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.