பாவம் போக்கி மோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறக்கப்படுவதன் காரணம் என்ன?

 
1 1

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பதை காண்பதும், சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பதும் மிக மிக சிறப்பான ஒன்றாகும். பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் இரா பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்படும். இந்த 20 நாட்களும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் இசைக்கப்படும். 

விரதங்களில் மிகவும் புண்ணியமான விரதமாகவும், பெருமாளுக்கு மிகவும் விருப்பமான விரதமாகவும் கருதப்படுவது ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பஞ்சமா பாவமும் நீங்கி, அவர்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதுடன், இறுதியில் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திதிகளில் 11வது திதியாக வரும் ஏகாதசி, வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவற்றில் வருவது உண்டு. அதாவது மாதத்திற்கு 2 ஏகாதசிகள் என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி விரத நாட்கள் வரும். இவை ஒவ்வொன்றிற்கும் தனியான பெயர்கள், சிறப்புகள் மற்றும் தனியான பலன்கள் உண்டு. சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அப்படி மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என சிறப்பித்து கொண்டாடுகிறோம். மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாகவும் விரத நாளாகவும் வரும் வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்லுவதுண்டு. இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும் நடத்தப்படும். வைகுண்ட துவாரம் எனப்படும் இந்த வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு வைண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பக்தர்கள் அனைவரும் இந்த ஒரு நாள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் இரவு முழுவதும் கண் விழித்து, உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிப்பது உண்டு.

ஏன் இந்த நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பெருமாளின் காதுகளிலிருந்து தோன்றிய மது, கைடபர் என்ற அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். திருமால் அவர்களுடன் போரிட்டு வென்றபோது, அசுரர்கள் இருவரும் அவரிடம் சரணடைந்தனர். தங்களுக்கு வைகுண்டத்தில் இடமளித்த பெருமாளிடம், "வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக உங்களைத் தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி (மோட்சம்) கிடைக்க வேண்டும்" என்று வரம் வேண்டினர்.

அசுரர்களின் இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்று ஒருநாள் மட்டும் சொர்க்கவாசலைத் திறந்து, தன்னைத் தரிசிப்பவர்களுக்குத் தன் உலகமான வைகுண்டத்தில் இடமளிக்க அருள்பாலித்தார். இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் மார்கழி ஏகாதசி அன்று அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.