“கடைசி நிமிட கதறல் கேட்டிருந்தால் மரணமும் அழுதிருக்கும்” - விமான விபத்து குறித்து வைரமுத்து..!!
அகமதாபாத் விமான விபத்து குறித்து தனது கவிதை பாணியில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து, ஒரு விமானமே கருப்புப் பெட்டியாய்க் கருகிக் கிடக்கையில் எந்தக் கருப்புப் பெட்டியை இனிமேல் தேடுவது? என இரங்கல் தெரிவித்திருகிறார்.
இதுகுறித்தான அவர்து பதிவில், “

கருப்புப் பெட்டி தேடுவார்கள்
விமானம் விபத்தானால்
ஒரு விமானமே
கருப்புப் பெட்டியாய்க்
கருகிக் கிடக்கையில்
எந்தக் கருப்புப் பெட்டியை
இனிமேல் தேடுவது?
பறிகொடுத்தோர்
பெருமூச்சுகள்
கரும்புகையாய்...
தீப்பிடித்த கனவுகளின்
சாம்பல்களை
அள்ளி இறைக்கிறது
ஆமதாபாத் காற்று
அவரவர் அன்னைமாரும்
கண்டறிய முடியாதே
அடையாளம் தெரியாத
சடலங்களை
புஷ்பக விமானம்
சிறகு கட்டிய
பாடையாகியது எங்ஙனம்?
கடைசி நிமிடத்தின்
கதறல் கேட்டிருந்தால்
தேவதைகள் இறந்திருக்கும்;
மரணம் முதன்முதலாய்
அழுதிருக்கும்
எரிந்த விமானம்
ஃபீனிக்ஸ் பறவையாய்
மீண்டெழ முடியாது
நாம் மீண்டெழலாம்
தவறுகளிலிருந்து” என்று குறிப்பிட்டுள்ளார்.


