16 கட்சிகள் இல்லை, 36 கட்சிகள் ஒன்று கூடினாலும் பாஜகவை வீழ்த்த முடியாது - வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு எதிராக 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது என பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிஆல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

வானதி

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:  16 கட்சி கூட்டணி அல்ல 36 கட்சிகளாக இருந்தாலும் எந்த பலனும் கிடைக்காது. பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா? கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாபில் காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவாரா? மராட்டியத்தில் பிளவுபட்ட உத்தவ் தாக்கரே கட்சிக்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எத்தனை தொகுதிகள் கொடுக்கும்? கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? இப்படி பதில் கண்டுபிடிக்க முடியாத பல கேள்விகள் இருக்கும் போது 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் 106 நாட்கள் கூடி பேசினாலும் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும். இவ்வாறு கூறினார்.