மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்

 
thiruma

மணிப்பூர் பிரச்சனை  குறித்து விவாதிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் ஒத்திவைப்புத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். 

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 29 & 30 அன்று மணிப்பூர் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்றேன். அப்போது வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன், அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. ‘ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்களை பாதுகாக்க தவறிவிட்டது’ என்பதே இருதரப்பிலும் பாதிகப்பட்டவர்களின் பொதுக்கருத்தாக உள்ளது. இந்த வன்முறையால் அங்கே இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இத்தகைய சூழ்நிலையிலும் அங்கே வன்முறை தொடர்வது தான் மிகக்கொடுமை. மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தையும் அங்கே நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு நாம் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்றியமையாதது எனக் கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் மற்ற வேலைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கிறேன். முறையான தீர்வுகளை காண நாம் கவனம் செலுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்கான மற்றும் பாதுகாப்பு உணர்வை அளிப்பதற்கான பணிகளை நாம் ஆற்ற முடியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.