இன்றைய தினத்தை கருப்பு நாளாக கடைபிடிக்கிறோம் - திருமாவளவன் பேட்டி

 
thiruma

சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதால் இந்த நாளை கருப்பு நாளாக கடைபிடிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 19 கட்சியினர் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். 

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூரியதாவது: நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவருமே அழைக்கப்படவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளோம்.  இன்றைய தினத்தை விசிக கருப்பு நாளாக கடைபிடிக்கிறோம். அவர்களின் சனாதன அரசியலின் கொள்கை குரு சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28ம் தேதியை அவர்கள் தேர்வுசெய்ததை அரசியல் உள்நோக்கமாக கருதுகிறோம். இவ்வாறு கூறினார்.