அதிமுக, பாஜக, தவெக இடையே 2-வது கட்சி யார் என்பதில்தான் போட்டியே... திருமாவளவன் பேட்டி

 
திருமாவளவன் திருமாவளவன்

அதிமுக, தவெக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே இரண்டாவது கட்சி யார் என்பதில்தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

'பெண்களை விரட்டிய காரில் கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது'- திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த வாரம் நான்காம் தேதியுடன் முடிவடைகிறது. எஞ்சியுள்ள நாட்களில் வக்ஃபு திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கைக் குழுவில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு ஒரு சார்பான நிலைப்பாட்டைக் கூட்டுக்குழு எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் மசோதாவை மீண்டும் அவையில் அறிமுகப்படுத்தி அதை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. மீண்டும் எதிர்க்கட்சிகளின் சார்பில் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறோம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதலாக அமையும்.

பாஜக அரசு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் போய் முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் அமித்ஷா கூறியிருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவருக்கே தெரியும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவும் பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. புதிதாக கட்சி தொடங்கிய விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாகத் தெரியவில்லை. 

திருமாவளவன்


விஜய் தனது முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவோ, பாஜகவோ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லி இருக்கிறார். அதிமுக, தவெக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே இரண்டாவது கட்சி யார் என்பதில்தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது. தலைமை என்பது முக்கியமான விஷயம் தான். ஆனால் பாஜக- அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி. அந்தக் கூட்டணி அரசியலுக்காக வழிந்து உருவாக்கப்படுகிற கூட்டணியே தவிர, கொள்கை அடிப்படையில் பொருந்தாத கூட்டணி. அதனால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையிலான நடவடிக்கைகளில் முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வப்போது கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையாக கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது. அதனால் இந்த கூட்டணியில் வலு இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிமுக- பாஜக மற்றும் மற்ற கட்சிகளுக்கு இடையே இருக்கும் கூட்டணி அடிப்படையிலேயே கொள்கைப் பொருந்தாக் கூட்டணி” என்றார்.