"கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி இன்னமும் பேசவில்லை" - திருமாவளவன்
வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெறும். இந்தியா கூட்டணி கட்சிகள் தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக சங்பரிவார் அமைப்புகளின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனுடன் அரசியல் பேசவில்லை. வைகைச் செல்வன் எழுதிய புத்தகங்களை வழங்கினார். இலக்கியம் தொடர்பாக பேசினோம். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தாலும் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டதாக ஈபிஎஸ் வெளிப்படையாக பேசவில்லை. பாஜக தரப்பில் இருந்து மட்டுமே கூட்டணி ஆட்சி என பேசுகிறார்கள். தேர்தலின் போது கூடுதல் தொகுதிகள் கேட்பது வழக்கமான நடைமுறை. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 24ம் தேதி விசிக விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
ஜூன் 14ஆம் தேதி திட்டமிட்டபடி பேரணி நடைபெற்றது. அது மாபெரும் வெற்றி பெற்றது. இலட்சக்கணக்கான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.விடுதலை சிறுத்தை கட்சி அரசியலில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. பேரணி வெற்றி பெற உழைத்த விசிகவினர், திருச்சி மக்களுக்கும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை கிறிஸ்தவர்கள் எதிரான தாக்குதல்களையும் அவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலையும் தொடர்ச்சிச்சியாக நடத்தி வருகிறார்கள்.” என்றார்.


